கலப்பு இலக்கை உயர்த்த வேண்டுகோள்
பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவை 20 சதவீதத்தைத் தாண்டி உயர்த்த வேண்டும் என்றும், சர்க்கரை ஆலைகளில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (ISMA) மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சருடன் சந்திப்பு
இந்த கோரிக்கைகள் தொடர்பாக சங்க பிரதிநிதிகள் புதுடில்லியில் மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை அண்மையில் நேரில் சந்தித்து தெரிவித்ததாக கூறினர். கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான விவகாரங்கள் முடிந்த பின் எத்தனால் விஷயத்தில் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்ததாகவும் சங்கம் தெரிவித்தது.
சேமிப்பு மற்றும் விநியோக நிலவரம்
2025 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இதனால் எரிபொருள் இறக்குமதி குறைந்து சுமார் ரூ.1.36 லட்சம் கோடி அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்தது.
சர்க்கரை ஆலை எத்தனாலுக்கு கொள்முதல் முன்னுரிமை கோரல்
தற்போதைய எத்தனால் விநியோக ஆண்டில் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) உறுதியளிக்கப்பட்ட 292 கோடி லிட்டரில் 119 கோடி லிட்டர் எத்தனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ISMA கூறியது. மேலும் தானிய அடிப்படையிலான எத்தனால் விநியோகம் 209 கோடி லிட்டர் என்றும், இது உறுதியளிக்கப்பட்ட 766 கோடி லிட்டரில் 27% என்றும் தெரிவித்தது; இந்த விவரங்களை அமைச்சரிடமும் எடுத்துரைத்ததாக கூறியது. விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் சர்க்கரை ஆலைகள் முக்கிய பங்காற்றுவதால், சர்க்கரை ஆலைகளில் தயாரிக்கும் எத்தனாலுக்கு அதிக முன்னுரிமை அளித்து கொள்முதல் செய்ய வேண்டும் என சங்கம் வலியுறுத்தியது.




