சென்னை மாதவரத்தில் செயல்படுத்தப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில், ஒப்பந்தப்படி வீடுகளை ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ் மீது புதிய புகார்கள் பதிவு செய்ய ரெரா (ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்) அனுமதி வழங்கியுள்ளது.

சுதீஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணஜோதி ஆகியோர் நில உரிமையாளர்களாக இருந்து, ‘லோகா டெவலப்பர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து அந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். கட்டப்பட்ட வீடுகள் குறிப்பிட்ட காலக்கெடுவில் ஒப்படைக்கப்படவில்லை என பாலதண்டபாணி உள்ளிட்ட ஐந்து பேர் முன்பே ரெராவிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்த வழக்கில், ரெரா தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், திட்டத்தில் கட்டுமான நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு குறைபாடுகளை மனுதாரர்கள் சுட்டிக்காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிலருக்கு கட்டுமான நிறுவனம் மற்றும் நில உரிமையாளர்கள் இணைந்து விற்பனைப் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளதும் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில், மீதமுள்ள நபர்கள் நில உரிமையாளர்கள் சுதீஷ் மற்றும் பூர்ணஜோதி மீது புதிதாக தங்கள் புகார்களை பதிவு செய்ய அமர்வு அனுமதி வழங்கியுள்ளது.