புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் உள்ளிட்ட எதிர்பாராத உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான “பொருளாதார நிலைத்தன்மை நிதி” தொகுப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

லோக்சபாவில் பட்ஜெட் மீதான துணை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதும் இந்த நிதியின் முக்கிய நோக்கம் என கூறினார்.

இந்த தொகுப்பில் நிகர ரொக்க செலவு ரூ.57,381.84 கோடி என்றும், மீதமுள்ள தொகை அரசின் சேமிப்பிலிருந்து ஈடுசெய்யப்படும் என்றும் அவர் விளக்கினார். 2025-26 நிதியாண்டின் நிதி பற்றாக்குறையில் இதனால் எந்த தாக்கமும் ஏற்படாது; பட்ஜெட்டில் கணிக்கப்பட்டபடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% என்ற அளவிலேயே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

துணை மானிய கோரிக்கைகள் கொண்டு வருவது மோசமான பட்ஜெட் திட்டமிடல் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். பட்ஜெட் என்பது முன்கூட்டிய கணிப்பு; போர் அல்லது விநியோகத் தொடர் பாதிப்பு போன்ற எதிர்பாராத சவால்கள் வந்தால் தேவையான நிதியை உருவாக்குவது சமயோசித நடவடிக்கை என கூறினார்.

எதிர்க்கட்சிகளின் கடும் கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில், ரூ.2.01 லட்சம் கோடி கூடுதல் செலவினங்களை கொண்ட துணை மானிய கோரிக்கைகள் குரல் ஓட்டெடுப்பு மூலம் சபையில் நிறைவேற்றப்பட்டன.