சண்டிகர்: நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கிளைகளை விரிவுபடுத்தவும் மக்கள் தொடர்பு திட்டங்கள் வழியாக சமூகத்தில் இணைப்பை வலுப்படுத்தவும் ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் இணை பொதுச்செயலர் சி.ஆர். முகுந்த் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதிகள் சபை கூட்டம் ஹரியானாவில் நேற்று தொடங்கியது. சமல்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹோசபலே தொடக்கி வைத்தனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய முகுந்த், ‘கிருஹசம்பர்க்’ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளை சென்றடைந்ததாகவும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் நல்லிணக்க கூட்டங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வட்டங்கள் வழியாக சமூகத்தில் நேர்மறை தாக்கத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். கேரளாவில் முஸ்லிம், கிறிஸ்துவ குடும்பங்கள் மற்றும் கம்யூனிச சார்புடைய தனிநபர்களுக்கு சொந்தமான வீடுகள் உட்பட பல குடும்பங்களை தொண்டர்கள் சென்றடைந்ததாகவும், பழங்குடியின பகுதிகளிலும் தொடர்பு விரிவடைந்ததாகவும் கூறினார்.

நுாற்றாண்டு விழா காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இரண்டு முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும் என முகுந்த் கூறினார். ஒன்று கிளை வலையமைப்பை விரிவுபடுத்துவது; மற்றொன்று மக்கள் தொடர்பு மற்றும் வெளிச்சேர்க்கை திட்டங்கள் மூலம் சமூக இணைப்பை வலுப்படுத்துவது.