மதுரை: நடிகர் ரஜினிகாந்த் ஆட்சி, அரசியல், அதிகாரம் ஆகியவற்றால் மயங்கக்கூடியவர் அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மானாமதுரை இளைஞர் ஆகாஷ் போலீசார் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததாகக் கூறி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் நிலவரம் குறித்து, அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் விஜய் கட்சி கூட்டணி அமைப்பது இன்னும் முழுமையாக வடிவம் பெறவில்லை என்றும், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும் கூறினார்.
மேலும், ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக தி.மு.க. அவரை “விரட்டிவிட்டது” என்று த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறுவது கற்பனை எனத் தெரிவித்தார். ரஜினி அந்த நிலையிலிருந்து விலகி விட்டதால் ஆசை காட்டி அரசியலுக்குள் இழுக்க முடியாது என்றும், ரசிகர்களின் விருப்பத்துக்காக ஒருகாலத்தில் கட்சி தொடங்க நினைத்தாலும் அன்றைய அரசியல் சூழல் தமக்கு உகந்ததல்ல என உணர்ந்து கைவிட்டார் என்பதே உண்மை என்றும் கூறினார். தி.மு.க. அச்சுறுத்தியதால் அவர் பின்வாங்கினார் எனச் சொல்வது ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்துவது என்றும், புதிதாக கட்சி தொடங்கிய சசிகலா எத்தகைய அரசியல் முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.




