ஈரானுடனான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தன்னால் கணிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், காலக்கெடு தெரிந்தால் என்ன பயன் எனவும் கேள்வி எழுப்பினார்.
மத்திய கிழக்கிலும் உலகளாவிய அளவிலும் உள்ள அணு ஆயுத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்ததாக அவர் கூறினார். மேலும், அமெரிக்கா தற்போது முன்னெப்போதும் இல்லாத ஆதிக்க நிலையில் இருப்பதாகவும், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை அழிந்துவிட்டதாகவும், ராணுவத்தின் பெரும்பகுதி சேதமடைந்ததாகவும், ரேடார் வசதி இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
இன்று மிகக் கடுமையான, சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறிய டிரம்ப், ஈரானுடனான போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இலக்குகள் சிறிதளவு மாறுபடலாம் எனவும் தெரிவித்தார். தனது முதல் பதவிக்காலத்திலேயே அமெரிக்க ராணுவத்தை வலுப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பணியை அமெரிக்கக் கடற்படை எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு, அது “விரைவில்” நடக்கும் என டிரம்ப் பதிலளித்தார். மேலும், ஈரானின் கார்க் தீவில் மத்திய கிழக்கு வரலாற்றில் மிகச் சக்திவாய்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றை அமெரிக்கா நடத்தியதாகவும், அங்குள்ள ராணுவ இலக்குகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் அவர் அறிக்கையில் கூறினார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்ல தலையீடு ஏற்பட்டால், தன் முடிவை உடனடியாக மறுபரிசீலிப்பதாக அவர் எச்சரித்தார். ஈரானுக்கு ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது என்றும், ஆயுதங்களை கீழே வைத்து நாட்டில் எஞ்சியிருப்பதை காப்பாற்றுவது புத்திசாலித்தனம் என்றும் டிரம்ப் கூறினார்.




