சட்டசபை தேர்தலை தனித்து எதிர்கொள்ள தவெக (TVK) தயாரா என்ற கேள்வி, கட்சியின் வேட்பாளர் தேர்வு செயல்முறையிலேயே மீண்டும் முன்வந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தகவலின்படி, தவெக தலைவர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த், போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்தனர். சுமார் 60 தொகுதிகளுக்கான நேர்காணலில், ஒரு தொகுதிக்கு ரூ.5 கோடி அளவுக்கு செலவாகும் நிலையில் அதை சமாளிக்க முடியுமா என அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பலர் தங்களால் அந்த அளவுக்கு செலவு செய்ய முடியாது என்று தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. சட்டசபை தேர்தலில் வேட்பாளர் செலவு வரம்பு ரூ.40 லட்சம் என்றாலும், நடைமுறையில் செலவு பல மடங்கு அதிகமாகும் என்பதால், தனித்து போட்டியிடுவது எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வி கட்சிக்குள் வலுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, கூட்டணி அமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் கருத்து கேட்டதாகவும், மாவட்ட தலைவர்களில் சுமார் 90% பேர் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கருத்துகள் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.
கடந்த இரண்டு நாட்களாக கூட்டணி தொடர்பான செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகும் நிலையில், விஜய் தரப்பில் இதற்கு மறுப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




