செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் ஆதிக்கம் நீடித்தால் மனித ஆற்றலின் மதிப்பு குறையக்கூடும் என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சனிக்கிழமை எச்சரித்தார். இயந்திரங்களுக்கும் சிந்தித்து பதிலளிக்கும் திறனை நாம் கற்றுக் கொடுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை பார் கவுன்சில் அரங்கில் நடைபெற்ற “லைப், லா அண்டு லிட்டரேச்சர் – ரிப்ளெக்ஷன்ஸ் ஆப் ஏ ஜட்ஜ்” என்ற நூல் அறிமுக விழாவில் அவர் உரையாற்றினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதிய இந்த நூலை இந்திய வழக்கறிஞர்கள் சங்கமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸும் இணைந்து வெளியிட்டன.

கம்பராமாயணம் போன்ற சாகா வரம்பெற்ற படைப்புகள் மொழி இருக்கும் வரை நிலைத்திருக்கும் என நீதிபதி சுந்தரேஷ் கூறினார். எந்த நூலாக இருந்தாலும் வாசகர்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்நூல் இளம் சட்ட மாணவர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், சட்டம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பரவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் அதன் ஆதிக்கம் அசுர வேகத்தில் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறினார்.

நூலாசிரியர் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசுகையில், குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயைப் போல மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த உணர்வுடன் நிற்கிறேன் என்றார். இதுவரை பெறுபவனாக இருந்தேன்; இந்த நூல் வாசகர்களின் கைகளில் சென்று சேர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.