தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தேர்தல் நெருங்கும் முன் தமிழக அரசியலில் “ஒரு திருப்பம்” ஏற்படும் என கூறினார். கோவை காளப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதை தெரிவித்தார்.
விளாத்திகுளத்தில் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் போலீசார் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதற்காக முதல்வர் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து எழும் தகவல்களை கேள்விக்குள்ளாக்கிய அவர், இந்தியாவில் வேறு எங்காவது இப்படியான தட்டுப்பாடு உள்ளதா என கேட்டார். வதந்திகளை பரப்பி மக்களிடம் பீதியை உருவாக்குகிறார்கள் என்றும், டிஜிபி மற்றும் உள்துறை செயலர் தவறான தகவல்களை அளித்து மக்களை நம்ப வைக்க முயல்கிறார்கள் என்றும் கூறினார்.
அரசியல் நிலவரம் குறித்து பேசுகையில், தேர்தல் எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்றும், தங்கள் கூட்டணி வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறியது, ம.தி.மு.க மற்றும் வி.சி.க தொடர்பான சீட் பகிர்வு சிக்கல்கள் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்பதில் தவறு இல்லை என்றும், “ஜனநாயகன்” படத்துக்கும் பா.ஜ.க-க்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறினார். தே.ஜ. கூட்டணியில் அ.தி.மு.க வலுவாக இருப்பதாகவும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் நிற்பார் என்றும் தெரிவித்தார். தாம் இதுவரை சீட் கேட்கவில்லை; கட்சி சொல்வதை செய்வேன், பிரசாரமே தனது கடமை என்றும் அவர் கூறினார்.




