தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு நீதி கிடைத்து, அது தங்கள் சொந்த மொழியில் புரியும்போதுதான் நாட்டின் மீது நம்பிக்கை வலுப்படும் என்று சனிக்கிழமை தெரிவித்தார்.

மத்திய சட்டத் துறை அமைச்சகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ‘டெலி-லா’ திட்டம் குறித்த கருத்தரங்கில் அவர் பேசினார். சமூகத்தின் விளிம்பு நிலை மக்களிடம் மின்னணு வழியாக சட்ட சேவைகளை கொண்டு செல்லும் முயற்சியாக இந்தத் திட்டம் இருப்பதாகவும் கூறப்பட்டது. நிகழ்வில் ‘வடகிழக்கு மாநிலங்களுக்கான வழக்காற்று சட்டங்கள்’ என்ற மின்னணு புத்தகமும் வெளியிடப்பட்டது.

நீதி வழங்கப்படுவது மட்டுமல்ல, அது தங்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும் என அர்லேகர் வலியுறுத்தினார். மொழி தடையாக மாறும்போது, ஏழை மற்றும் எளிய மக்களுக்கு நீதியின் உண்மையான அனுபவம் மறுக்கப்படும் என்றார்.

சட்ட நடைமுறைகள் சாமானியர்களுக்கும் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் நபரும் உயர்நீதிமன்றம் தனக்காக என்ன செய்கிறது என்பதை தன் மொழியில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். நிகழ்வில் மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பங்கேற்றனர்.

மேலும், தமிழகத்தில் டெலி-லா திட்டம் அனைத்து மாவட்டங்களையும் சென்றடைந்துள்ளதாகவும், 375-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இதில் பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘அனைவருக்கும் நீதி’ என்பதே இதன் அடிப்படைத் தத்துவம் என்றார்.