நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாற்று எரிசக்தி பயன்பாட்டுக்கு நுகர்வோர் மாற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, குழாய் வழி இயற்கை எரிவாயு (பி.என்.ஜி.) வசதி உள்ள பகுதிகளில் வசிப்போர் உடனடியாக அந்த இணைப்புக்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்காசிய பிராந்தியத்தில் நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் உலகளவில் எரிபொருள் விலை உயர்வும் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியாக, இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வர ஈரான் அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து சில இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தாலும், உள்நாட்டு தேவை அதிகரிப்பால் தட்டுப்பாடு இன்னும் முழுமையாக சீராகவில்லை என கூறப்படுகிறது.

தட்டுப்பாட்டை சமாளிக்க, ‘கெயில்’ (GAIL) முக்கிய நகரங்களில் உள்ள எரிபொருள் விநியோக நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி, சாத்தியமான இடங்களில் பி.என்.ஜி. இணைப்புகளை வழங்கி எல்.பி.ஜி. மீது உள்ள சார்பை குறைக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணைச் செயலர் சுஜாதா சர்மா, நாடு முழுவதும் தற்போது 1.50 கோடி பி.என்.ஜி. நுகர்வோர் உள்ளதாகவும், அவர்களுக்கு தடையற்ற விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 60 லட்சம் நுகர்வோருக்கு பி.என்.ஜி. வசதி இருந்தும் அவர்கள் மாறவில்லை; இக்கட்டான சூழலில் அந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள தலைநகர் பிராந்தியத்தில் தொழில்துறை மற்றும் ஹோட்டல்களுக்கு அடுப்புக் கரி, மண்ணெண்ணெய், வேளாண் கழிவு, மரத்தூள், விறகு போன்ற மாற்று எரிசக்திகளை ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புதிய பி.என்.ஜி. இணைப்புக்கு ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கும்; புதிய இணைப்புக்கு மானியம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.