கோவையில், புதூர் 4வது போலீஸ் பட்டாலியன் பிரிவில் பயிற்சிக்கு வந்த பெண் போலீஸ் அளித்த பாலியல் தொல்லை புகாரைத் தொடர்ந்து எஸ்பி ரேங்க் அதிகாரி செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை புதூரில் செயல்படும் சிறப்பு போலீஸ் படை பிரிவின் கமாண்டன்டாக செந்தில்குமார் பணியாற்றியதாகவும், பயிற்சிக்கு வந்த பெண் போலீஸிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பெண் போலீஸ், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் விசாரணைக் குழுவிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு செந்தில்குமாரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்தது. விசாரணை முடியும் வரை சென்னை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை தலைமையகத்தில் தங்க வேண்டும்; அரசு அனுமதி இல்லாமல் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் புகாரில் உயர் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். பெண்களை பாதுகாக்க வேண்டியவர்களே இவ்வாறு குற்றச்சாட்டுக்கு உள்ளாகுவது கண்டிக்கத்தக்கது என கூறிய அவர், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாகவும், இதற்கு திமுக அரசின் செயலற்ற தன்மையும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கட்டுப்படுத்தப்படாததும் காரணம் எனவும் தெரிவித்தார்.




