தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் மார்ச் 15 அன்று அறிவித்தது. அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடத்திலிருந்தே தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்தன.
இந்த விதிகளின்படி பொதுமக்கள் ஆவணமின்றி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்லலாம். ரூ.50 ஆயிரத்தை மீறும் தொகையை எடுத்துச் செல்லும் போது உரிய ஆதார ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்; இல்லையெனில் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்யலாம்.
பொது இடங்கள் மற்றும் அரசு சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் பணியை தொடங்கியுள்ளன; தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆளும் கட்சி அரசு இயந்திரம், வாகனங்கள் அல்லது அதிகாரிகளை பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என விதிகள் வலியுறுத்துகின்றன. வழிபாட்டுத் தலங்களைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்துதல், சாதி/மதம்/மொழி அடிப்படையில் ஓட்டுக் கேட்பது, வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவது மற்றும் ஓட்டுக்கு விலை பேசுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஓட்டுப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களை நடத்தக் கூடாது. தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவும், அரசு அதிகாரம் மற்றும் பொதுப்பணத்தைப் பயன்படுத்தி பிரசாரம் செய்வதைத் தடுக்கவும் இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




