ஜாமினில் கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கையாள, குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவை வழக்கமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஜாமினை ரத்து செய்யும் நடவடிக்கையை முன்னிலைப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை போலீஸ் கமிஷனர் 2025 செப்.17 அன்று பிறப்பித்த குண்டர் சட்ட தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி பழனிவேல்ராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். அவர்மீது ஒருவர் வழிமறித்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும், ஆபாசமாக பேசியதாகவும், அருகில் இருந்தவர்களை மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மனுதாரர் தரப்பில், முந்தைய வழக்கில் ஜாமினில் வெளியே இருக்கும் போது குற்றம் நடந்தால் ஜாமினை ரத்து செய்ய மனு செய்வதே சரியான நடைமுறை; தடுப்புக் காவல் உத்தரவு தேவையில்லை என வாதிடப்பட்டது. மேலும் கைது காரணங்கள் குறிப்பாணையில் தெளிவாக இல்லை என்றும், குற்றச்சாட்டுகள் அதிகபட்சமாக ‘சட்டம்-ஒழுங்கு’ பிரச்னை மட்டுமே; ‘பொது ஒழுங்கு’ பாதிப்பு என்ற அளவிற்கு இல்லை என்றும் கூறப்பட்டது. அரசு தரப்பில், ஜாமின் ரத்து மனு தாக்கல் செய்யாததை மட்டும் காரணமாகக் கொண்டு தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்ய முடியாது; சம்பவம் பொது ஒழுங்கை பாதித்ததாகவும் வாதிடப்பட்டது.
நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ், பி. தனபால் அமர்வு, மனுதாரரின் செயல் அப்பகுதியின் அமைதி அல்லது சமூகத்தின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இல்லை; அதிகபட்சமாக ‘சட்டம்-ஒழுங்கு’ பிரச்னையாக மட்டுமே கருதலாம் எனக் கூறி, குண்டர் சட்டத்தின் கீழான தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்தது.
மேலும், ஜாமினில் வெளிவந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கையாள, தடுப்புக் காவலுக்கு பதிலாக ஜாமின் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதுகுறித்த தற்போதைய நிலை பற்றி டி.ஜி.பி. ஏப்.7க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.




