மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பாதையை இந்திய கப்பல் கழகத்துக்குச் (SCI) சொந்தமான ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என்ற இரண்டு எரிவாயு கப்பல்கள் வெற்றிகரமாக கடந்துள்ளன.

ஈரானைச் சுற்றியுள்ள மோதல் சூழல் காரணமாக அந்தப் பாதையில் தடங்கல் ஏற்பட்டதாகவும், அங்கு செல்லும் கப்பல்களுக்கு தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கமாக உலகளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வும், சமையல் எரிவாயு விநியோக பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் தொடர்பு கொண்டு பேசினார். பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியானுடன் பேசி, இந்திய கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் கூறுகையில், இந்த இரண்டு கப்பல்களிலும் தலா சுமார் 40,000 மெட்ரிக் டன் எரிவாயு இருப்பதாக தெரிவித்தனர். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 22 இந்திய கப்பல்கள் இன்னும் காத்திருப்பதாகவும், அவற்றை பாதுகாப்பாக நகர்த்த மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினர்.