இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் சமீபத்தில் வாங்கப்பட்ட புதிய ராணுவ தளவாடங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்ட பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ. தீவிரமாக செயல்படுகிறது என இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
முன்னதாக, பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு பண ஆசை காட்டி தகவல்களைப் பெற முயன்றதாகவும், அவ்வப்போது கிளெர்க் உள்ளிட்ட சிலர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட செய்திகளும் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தற்போது அந்த அணுகுமுறையை மாற்றி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் கிடைக்கும் என்ற நோக்கில் மேல்மட்ட அதிகாரிகளை வளைக்க ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கூறுகிறது.
இதற்காக உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வலையமைப்புகளை உருவாக்கியதாகவும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு பண ஊக்கத்தொகை வழங்கி ஏஜென்ட்களாக அமர்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இவ்வாறு அமைப்புகளையும் ஆட்களையும் நியமிக்க பாகிஸ்தான் அரசு ஐ.எஸ்.ஐ.க்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. எதிர்கால ராணுவ திட்டங்கள், புதிதாக வாங்கப்படும் ட்ரோன் போன்ற ஆளில்லா விமானங்களின் செயல்பாடு உள்ளிட்ட ரகசிய தகவல்களைப் பெற இந்த வலையமைப்பு உதவும் என பாகிஸ்தான் நம்புவதாகவும், ஆனால் இந்த சதியை கண்டறிந்து பல ஏஜென்ட்கள் மற்றும் வலையமைப்புகளை கைது செய்து முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.




