திருவனந்தபுரம்: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கேரளாவில் சிறிய உணவகங்கள் மற்றும் சில வணிக நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் தினசரி வணிகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலை, உணவகங்களில் பெருமளவில் பணிபுரியும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் திரும்பத் தூண்டியுள்ளது. வேலை இடங்கள் மூடப்பட்டதால், பலர் முன்கூட்டியே புறப்படத் தொடங்கியுள்ளனர்.
மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் காஸ் கிடைப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே காரணத்தால் பல மாநிலங்களிலும் சிறிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேரளாவில் தொழிலாளர்கள் உடனடியாக திரும்ப வாய்ப்பில்லை என்பதால் உணவக மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடுத்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், அதன் பின்னரே பலர் மீண்டும் கேரளா வரக்கூடும் என கூறப்படுகிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் மையத்தைச் சேர்ந்த பினாய் பீட்டர் கூறுகையில், கேரளாவில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 50% உள்ளனர் என்றார். வழக்கமாக தேர்தலுக்கு ஒரு வாரம் முன் செல்லும் தொழிலாளர்கள், உணவகங்கள் மூடப்பட்டதால் முன்கூட்டியே புறப்பட்டுள்ளதாகவும், ரம்ஜான் கொண்டாட்டத்திற்காகவும் சிலர் முன்பே கிளம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் ஒரு மாதத்துக்குப் பிறகே திரும்புவர் என்பதால் நிலைமையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.




