நேபாளத்தில் நடந்த பஸ் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் 7 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
கண்டகி மாகாணத்தின் கோர்கா மாவட்டத்தில் 16 பக்தர்களை ஏற்றிச் சென்ற மின்சார பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. மனகாமனா கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் முத்துக்குமார் (58), மீனாட்சி (59), சிவகாமி (53), மீனா (58), தமிழரசி (60), அனாமலிகா (58), விஜயா (57) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களில் பஸ்சின் உதவியாளர் ஒருவரும் உள்ளார்; டிரைவர் உயிர் தப்பியுள்ளார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.




