சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கான பாராசிட்டமால் சிரப் கிடைக்காமல் இருப்பதால், சிரப்புக்கு பதிலாக மாத்திரை வழங்கப்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. பிறந்ததிலிருந்து 16 வயது வரை பல்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், தடுப்பூசி போட்ட பின் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் அல்லது ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்படுவது வழக்கம்.
இத்தகைய பாதிப்புகளை குறைக்க பொதுவாக திரவ வடிவிலான பாராசிட்டமால் சிரப் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி பெறும் குழந்தைகள் அதிகமாக இருப்பதால், தற்போது சிரப் தட்டுப்பாட்டை காரணமாகக் கொண்டு ஒரு பாராசிட்டமால் மாத்திரையை வழங்கி, அதை நான்காக உடைத்து தண்ணீரில் கரைத்து குழந்தைக்கு கொடுக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னர் கிராமப்புறங்களில் அதிகம் கேட்கப்பட்ட இந்த நடைமுறை, தற்போது சென்னையிலும் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் கூறுகின்றனர். திருவொற்றியூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்று மாத குழந்தைக்கு தடுப்பூசி போட்டபின் சிரப்புக்கு பதிலாக மாத்திரை வழங்கப்பட்டதாகவும், அதனை கொடுத்த பின்னும் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம், குழந்தைகளுக்கு சிரப்புக்கு பதில் மாத்திரை வழங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.




