சபரிமலை அய்யப்பன் கோவிலில் அபிஷேகத்திற்காக விற்கப்படும் நெய் பாக்கெட்டுகளின் விற்பனை கணக்குகளில் ரூ.25.52 லட்சம் அளவிலான முறைகேடு கண்டறியப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கை துறை தெரிவித்துள்ளது. இந்த விவரங்கள் இடைக்கால அறிக்கையாக கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக கோவில் சன்னிதானத்தில் நெய் அபிஷேக பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்தாண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனில் “அதி இஷ்டம் நெய்” விற்பனையில் முறைகேடு நடந்ததாக ஜனவரியில் புகார் எழுந்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினரும் தேவஸ்வம் போர்டு தணிக்கை துறையும் விசாரணை நடத்தினர். முதற்கட்டத்தில் சுமார் ரூ.16 லட்சம் முறைகேடு தெரிய வந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய தணிக்கை அறிக்கையில், இரண்டு நெய் சேகரிப்பு மையங்களுடன் தொடர்புடைய கணக்குகளில் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நெய் சேகரிப்பு, வடிகட்டுதல், பாக்கெட்டுகளில் நிரப்புதல் போன்ற செயல்முறைகளில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், பாக்கெட்டுகளில் உள்ள நெய்யின் கன அளவு அளவீடு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்முதல்–விற்பனை பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை; பிரதான கிடங்கில் இருந்து பெறப்பட்ட நெய்யில் இருந்து எத்தனை பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன போன்ற முக்கிய விவரங்கள் அதிகாரப்பூர்வ பதிவுகளில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சில பதிவுகள் பள்ளி நோட்டு புத்தகங்களில் பல திருத்தங்களுடன் எழுதப்பட்டிருந்ததாகவும், ஒரு கிலோ பிளாஸ்டிக் ரோலில் இருந்து தயாரிக்கப்பட்ட பாக்கெட்டுகளின் எண்ணிக்கை நாட்களுக்கு நாள் பெரிதும் மாறுபட்டதாகவும் தணிக்கை துறை சுட்டிக்காட்டியுள்ளது. அடுத்த சீசனுக்குள் நெய் விற்பனை முறையை டிஜிட்டல் மயமாக்கவும், விற்பனை கவுன்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும், சன்னிதானம் மற்றும் பம்பாவில் மாதாந்திர பூஜைகளில் காலாண்டு தணிக்கைகள் நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தி முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய தணிக்கை துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




