தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் மாநில அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) முடிந்த பின்னர் நடைபெறும் தேர்தல் இது; தகுதியில்லாதவர்கள் வாக்களிக்க முடியாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த 5 மாநிலங்களில் சேர்த்து மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில் ஆண்கள் 2,77,38,925 பேர், பெண்கள் 2,89,69,838 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேர் எனவும் அவர் விவரித்தார். முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
5 மாநிலங்களிலும் மொத்தம் 2.19 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும்; சராசரியாக 700 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்ற அளவில் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தில் 75,032 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன; நகர்ப்புறங்களில் 30,967 மற்றும் கிராமப்புறங்களில் 44,065 ஓட்டுச்சாவடிகள் இருக்கும். தேனி மாவட்டம் வருஷநாடு வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் பணிக்காக 1,444 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், சுமார் 25 லட்சம் அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார். பாதுகாப்பு பணிக்காக 8.50 லட்சம் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்; ஓட்டுச்சாவடி மையங்கள் 100% வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும், ஓட்டுச்சாவடிகளில் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.




