சென்னை: எரிவாயுவுக்கு பதிலாக மின் அடுப்புகளை பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின் பயன்பாட்டுக்கு, அனைத்து வகை உணவகங்களுக்கும் யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வளைகுடா நாடுகளில் போர் சூழல் காரணமாக தமிழகத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தொழில் துறை மற்றும் ஹோட்டல் உள்ளிட்ட துறைகள் சீராக இயங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், உணவகங்கள், டீக்கடைகள், ‘கிளவுட் கிட்சன்’ உள்ளிட்ட அனைத்துக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றார். மத்திய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் வரை மானியம் வழங்கப்படும் என்றும், ஏசி அல்லது ஹீட்டர் போன்ற சாதனங்களாக பிரித்து கணக்கிடாமல் கூடுதல் மின் செலவுக்கே யூனிட்டுக்கு ரூ.2 குறைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், எரிவாயு பற்றாக்குறையால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் போன்ற உபகரணங்களை வாங்குவதற்கு மானியத்துடன் கடன் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழும் மானியக் கடன் உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் எல்.பி.ஜி., சி.என்.ஜி., டீசல், பர்னஸ் ஆயில், விறகு போன்ற எரிபொருட்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள், மண்ணெண்ணெய், அதிவேக டீசல், பயோமாஸ் போன்ற மாற்று எரிபொருட்களுக்கு மாறும்போது புதிய அனுமதி தேவையில்லை; தகவல் தெரிவித்தால் போதும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனுடன், ஆவின் மூலம் பால் கொள்முதல், உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி விற்பனை, வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டை கண்காணிக்க மாநில-மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்தல், ரேஷனில் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்கல் மற்றும் பதுக்கலுக்கு கடும் நடவடிக்கை ஆகிய உத்தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.




