ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்து, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியை சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் போலீசாரும் இணைந்து உரி பகுதியில் தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர்.

நடவடிக்கையின் போது ஒருவர் ஊடுருவ முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்தார்; பின்னர் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து ஏகே ரைபிள், பிஸ்டல்கள் மற்றும் அதிக அளவிலான வெடிமருந்துகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.