ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களின் எதிரொலியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் 15 நாட்களை கடந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், போர் நிற்பதற்கான தெளிவான வழி இன்னும் தெரியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில், ஈராக்கில் ஈரான் நடத்தியதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ஈராக் வான்வெளியில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகள் தொடர்பான அபாயம் தொடர்ந்து நீடிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது. மேலும் பாக்தாத் தூதரகம் அல்லது எர்பில் துணைத் தூதரகத்திற்கு வர முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈராக்கின் வான்வெளி மூடப்பட்டிருப்பதால், நாட்டை விட்டு வெளியேற முயலும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு உதவி வழங்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




