நடிகர்-அரசியல்வாதி விஜயை தே.ஜ. கூட்டணியில் இணைக்க டெல்லியில் பா.ஜ.க. முக்கியஸ்தர்கள் முயன்றதாக த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனித்து போட்டியிடப் போகிறாரா, அல்லது கூட்டணியில் சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்கப் போகிறாரா என்ற கேள்விக்கு விஜய் தெளிவான பதில் அளிக்காமல் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது.
த.வெ.க. தனித்து நின்றாலே சுமார் 25% வாக்குகளை பெற முடியும் என்றும், தேர்தல் நெருங்கும் போது விஜய் பிரசாரத்தை தீவிரப்படுத்தினால் வாக்கு சதவீதம் மேலும் உயரும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதுவே தே.ஜ. தரப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே வட்டாரங்களின் தகவலின்படி, கரூர் சி.பி.ஐ. வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள விஜயை மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கு வரவழைத்தனர். அந்த பயணத்தில், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜயின் நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் மார்ச் 14 இரவு டெல்லி கோல்ப் கிளப் அருகே பா.ஜ.க. முக்கியஸ்தர்களை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அந்த சந்திப்பில், த.வெ.க. தனித்து போட்டியிட்டால் எதிர்ப்பு வாக்குகள் பிளவுபட்டு தி.மு.க.க்கு சாதகமாக முடியும் என்றும், தி.மு.க.வை வீழ்த்த விஜய் தே.ஜ. கூட்டணியில் வர வேண்டும் என்றும் பா.ஜ.க. தரப்பு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் உதாரணத்தை முன்வைத்து, சில “போலி சர்வேக்கள்” குறித்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கருத்துகளை விஜயிடம் எடுத்துரைத்ததாகவும், ஆனால் அவர் எந்த முடிவும் அறிவிக்காமல் மவுனம் காக்கிறார் என்றும் த.வெ.க. வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த மவுனமே கட்சிக்குள் உச்சக்கட்ட குழப்பத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.




