டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு புதிய நிபந்தனை ஒன்றை ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன யுவான் கரன்சியில் எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கும் திட்டம் குறித்து பேசப்படுவதாக கூறப்படுகிறது.
மேற்கு ஆசிய நாடான ஈரான், இந்த முக்கிய கடல் பாதையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், அனுமதியின்றி செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்குவோம் எனவும் எச்சரித்துள்ளது. தற்போது இந்த பாதை முடங்கியுள்ளதால் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக எரிசக்தி வினியோகத்தின் சுமார் 20 சதவீதம் இந்த கடல் வழித்தடம் மூலம் நடைபெறுகிறது. ஹார்முஸ் வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வினியோகத் தொடரிலும் பாதிப்பு ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் தங்கள் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த ஈரான் அரசு அதிகாரி ஒருவர், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படலாம்; ஆனால் அந்த வர்த்தகம் அமெரிக்க டாலரில் இல்லாமல் சீன யுவானில் நடைபெற வேண்டும் என்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.




