கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடவிருந்ததற்கு சில மணி நேரங்களுக்கு முன், முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
சமூக வலைதள பதிவில், மாநில கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் மசூதிகளில் பணிபுரியும் இமாம்களின் மாதாந்திர கவுரவ ஊதியம் ரூ.500 உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதனால் அவர்கள் இனி மாதம் ரூ.2,000 பெறுவார்கள். மேலும், கவுரவ ஊதியம் கோரி வந்த புதிய விண்ணப்பங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
இதற்கிடையில், அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகை இம்மாதம் முதல் வழங்கப்படும் எனவும் மம்தா அறிவித்தார். டிஏ நிலுவையில் 25 சதவீதத்தை வரும் 31க்குள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த டிஏ நிலுவை வழங்கலால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களின் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள் என மாநில அரசு கூறியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், அதற்கு முன்பாகவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இது நடத்தை விதிமீறல் அல்ல என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.




