டி.டி.பி. (தெஹ்ரீக்-இ-தலிபான் பாக்.) தொடர்பான விவகாரத்தை மையமாகக் கொண்டு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆப்கான் எல்லையோர பகுதிகளில் உள்ள டி.டி.பி. நிலைகளை வான் வழியாக தாக்கியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் டி.டி.பி. மையங்கள் மற்றும் தலிபான் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. டி.டி.பி. ஆப்கான் மண்ணிலிருந்து செயல்படுவதாகக் கூறி, அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு காபூலில் உள்ள தலிபான் அரசை பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் டி.டி.பி. அமைப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என ஆப்கான் தரப்பு கூறி, பாகிஸ்தான் கோரிய நடவடிக்கைகளை ஏற்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையே பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளன.
சமீபத்தில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ட்ரோன் மூலம் ஆப்கான் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாக ஆப்கானின் கிழக்கு பகுதிகளிலும் கந்தஹாரிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கந்தஹாரில் முக்கிய உள்கட்டமைப்புகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தலிபான் அரசு தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என கூறியுள்ளார். இருப்பினும், இரு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




