தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆதரவு தர வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை எழும்பூரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அவர் பேசினார். இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க. பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட தே.ஜ. கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தன் ஆட்சி காலம் சிறுபான்மை மக்களுக்கு “பொற்காலம்” எனக் கூறிய பழனிசாமி, முஸ்லிம் மக்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்ததாக தெரிவித்தார். மதசார்பின்மை, சமூக நல்லிணக்கம் என்ற கொள்கையில் இருந்து “அணு அளவும்” விலக மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

மேலும், சிறுபான்மையினரை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே காப்பாற்றுகின்றன என்ற தோற்றத்தை அவர்கள் உருவாக்குகின்றனர் என குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. தான் பாதுகாக்கிறது என்று கூறிய அவர், தி.மு.க. ஆட்சியை அகற்றுவது அனைவரின் கடமை என்றும், லஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும் விமர்சித்தார்.