தமிழகத்தில் மத நல்லிணக்கம் நிலைக்க சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்றும், முஸ்லிம்களின் ஒற்றுமை எந்நாளும் தொடர வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பேசிய அவர், தி.மு.க. மற்றும் முஸ்லிம்கள் இடையிலான உறவு கட்சி தொடங்கிய நாளிலிருந்தே தொடர்வதாகவும், அந்த பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது என்றும் கூறினார்.
தி.மு.க.வின் பலம் பெண்களே என குறிப்பிட்ட ஸ்டாலின், மகளிர் நலனை முன்னிறுத்தி பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். முஸ்லிம் சமுதாய பெண்களின் ஆதரவு கிடைத்தால் பலம் மேலும் பெருகும் என்றும் அவர் கூறினார்.
அதே மேடையில் பல சிறுபான்மை இயக்கங்கள் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய ஒருங்கிணைப்பை உருவாக்கியது தி.மு.க. தான் என கூறினார். நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறைகள் குறித்து பழனிசாமி கருத்து கூட சொல்லவில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், அ.தி.மு.க. கட்சியுடன் சேர்த்து தனது மனசாட்சியையும் பா.ஜ.க.விடம் அடகு வைத்ததாக பழனிசாமியை ஸ்டாலின் குற்றம்சாட்டினார். சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை தூண்டும் தரப்புகளுடன் கூட்டணி வைத்தால், சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாப்பையும் எப்படி நிலைநாட்ட முடியும் என கேள்வி எழுப்பினார். சிலர் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஒரு நாள் மட்டும் வந்து, முஸ்லிம்களுக்கு இன்னல் நேரும் போது மௌனம் காக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.




