தமிழகத்தில் உள்ள 77 சுங்கச்சாவடிகளில் 66 இடங்களில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணங்களை மாற்றியமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கான கட்டண மாற்றம் செப்டம்பரில் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கட்டண உயர்வு 5% முதல் 7% வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் மின்னணு முறையில் சுங்கம் வசூலிக்க ‘பாஸ்டேக்’ முறை 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 2021 முதல் கட்டாயமாக்கப்பட்டது. கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்களை அடிக்கடி பயன்படுத்துவோருக்காக ஆண்டுக் கட்டண (ஆண்டு பாஸ்) முறையையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தரவுகளின்படி இதுவரை சுமார் 11.86 கோடி பாஸ்டேக் வழங்கப்பட்டுள்ளன; இதில் சுமார் 5.9 கோடி தற்போது பயன்பாட்டில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கத் தொகையில் 98% வரை பாஸ்டேக் வழியே கிடைக்கிறது.

ஏப்ரல் 1 முதல் தமிழகத்தின் 66 சுங்கச்சாவடிகளில் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் கட்டணம், லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணமும் ரூ.300 முதல் ரூ.350 வரை உயரக்கூடும். இதே நாளில் நாடு முழுவதும் பாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் ரூ.3,000 இலிருந்து ரூ.3,075 ஆக உயர்த்தப்படுகிறது.