கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தின் அரண்மனையில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திரத்திற்கு முன் கேரளாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை திருவிதாங்கூர் அரசக் குடும்பம் ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள கவுடியார் அரண்மனை இவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாக உள்ளது.

அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அஸ்வதி திருநாள் கவுரிபாய் அளித்த புகாரில், தனது படுக்கையறையில் உள்ள அலமாரியில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 12 நகைகள் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

திருடப்பட்டவற்றில் தங்க சங்கிலிகள் மற்றும் கல் பதிக்கப்பட்ட மோதிரங்கள் உள்ளிட்ட சுமார் 40 சவரன் நகைகள் உள்ளதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.2 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.