வாஷிங்டன்: ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமாக கூறப்படும் கார்க் தீவு மீது அமெரிக்க தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், “பொழுதுபோக்கிற்குக் கூட தாக்குதல் நடத்துவோம்” என கிண்டலாகவும் பேசியுள்ளார்.

ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள கார்க் தீவு வழியாக ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் சுமார் 90% நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், அந்தத் தீவு ஈரானின் முக்கிய ராணுவ தளமாகவும் செயல்படுகிறது; கடற்படை தளங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் இருப்பதால், கார்க் தீவை கண்காணிப்பு நிலையமாகவும் ஈரான் பயன்படுத்துகிறது என செய்தி குறிப்பிடுகிறது.

மார்ச் 13-ஆம் தேதி கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் முன்பே உறுதி செய்திருந்தார். அந்த தாக்குதலில் 90-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதாகவும், கடற்படை கண்ணிவெடி சேமிப்பு மையங்கள், ஏவுகணை பதுங்குக் குழிகள், ராணுவ விமான நிலையங்கள் உள்ளிட்டவை அதில் அடங்கும் எனவும் அவர் தெரிவித்தார். அதேசமயம், மனிதாபிமான காரணங்களால் எண்ணெய் உள்கட்டமைப்புகளை திட்டமிட்டு தாக்கவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில், கார்க் தீவின் பெரும்பகுதி அழிந்துவிட்டதாகவும், தாக்குதல் மேலும் தீவிரமாகலாம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க நட்பு நாடுகள் போர் கப்பல்களை அனுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரான் தயாராக இருந்தாலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் இறுதியாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.