தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி மார்ச் 10 அன்று காணாமல் போனார். மறுநாள் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ஆடைகள் களைந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததைத் தொடர்ந்து குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் இளம்பகவத் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், சம்பவம் நடந்த ஐந்து நாட்களைக் கடந்தும் இதுவரை கைது நடக்காததால், மாணவியின் குடும்பத்தினரும் கிராம மக்களும் போலீசார் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். விசாரணையை சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் மாவட்டத்தில் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.
காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். மாணவியுடன் நெருக்கமாக பழகிய தோழிகள் மற்றும் சக மாணவர்களிடம் விசாரிப்பதில் சிக்கல் இருப்பதாகவும், சில பெற்றோர் போலீசாருக்கு ஒத்துழைக்காமல் ‘அடிக்கடி வர வேண்டாம்’ என கூறுவதாகவும் தெரிவித்தனர்.
வட மாநில தொழிலாளர்கள் மற்றும் வெளியூர் நபர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டாலும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை என போலீசார் கூறினர். கிராமப்பகுதி என்பதால் சிசிடிவி காட்சிகள் கிடைக்காததும், மாணவி மற்றும் அவரது தோழிகளின் மொபைல் போன்களை ஆய்வு செய்தும் துப்பு கிடைக்காததும் விசாரணைக்கு தடையாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், காட்டுப் பகுதியில் பெண்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டதில் சுமார் 45 வயது ஒருவர் சந்தேகத்தில் சிக்கியுள்ளதாலும், சம்பவ நாளில் அவர் அங்கு இருந்ததற்கான ஆதாரம் இல்லை என கூறினர். இதற்கிடையே, மாணவியின் உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்து வருவதாகவும், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.




