அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, ஏப்.14 அன்று விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மனு, தேர்தல் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறப்படும் வழக்கை சார்ந்தது.

2021 சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டபோது, பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து பொய்தகவல் அளித்ததாக மிலானி என்பவர் புகார் அளித்து வழக்கு தொடர்ந்தார்.

அந்த புகாரை விசாரித்த சேலம் நீதிமன்றம், காவல் துறை விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், மேலதிக நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை வழங்கப்பட்டது. பின்னர் வழக்கு இறுதி விசாரணைக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில், நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் மிலானி தரப்பு விரைவான விசாரணை கோரியதை ஏற்று, ஏப்.14 அன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.