ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடவடிக்கைகளை நேரடியாக ‘வெப் காஸ்டிங்’ மூலம் ஒளிபரப்புவதற்காக வெளியிடப்பட்ட டெண்டர் நிபந்தனைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தல் கமிஷன் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப். 23-ல் நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 75,000 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ள நிலையில், ஓட்டுச்சாவடிகளையும் ஓட்டு எண்ணிக்கை மையங்களையும் கண்காணிக்க ‘வெப் காஸ்டிங்’ சேவைக்காக தேர்தல் கமிஷன் மார்ச் 3-ல் டெண்டர் கோரியது.
இந்த டெண்டரில் பங்கேற்க ஆண்டுக்கு ரூ.100 கோடி விற்றுமுதல் உள்ளிட்ட தகுதி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை சேர்ந்த ‘ஐ-நெட் செக்யூர் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 1.50 லட்சம் வெப் கேமராக்கள் போதுமான நிலையில் தங்களிடம் 1.80 லட்சம் கேமராக்கள் உள்ளதாகவும், ரூ.100 கோடி விற்றுமுதல் நிபந்தனை நியாயமற்றதாகவும் கூறி டெண்டரை ரத்து செய்ய கோரியது.
தேர்தல் கமிஷன் தரப்பில், கடந்த தேர்தலில் 45,000 கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், வரும் தேர்தலில் அதை மூன்று மடங்காக உயர்த்தி 1.50 லட்சம் கேமராக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அளவிலான பணிகளை கையாளும் திறன் உள்ள நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் நிபந்தனைகள் அமைக்கப்பட்டதாகவும், மனுதாரர் டெண்டரில் பங்கேற்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் கமிஷன் இன்று பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.




