நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பாதுகாப்பாகவும் தடையின்றியும் நடைபெற்று வருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (இந்தியன் ஆயில்) தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கு சிலிண்டர்கள் சீராக கிடைப்பதை தொடர்ந்து உறுதி செய்வதாகவும், விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்றும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சில வாடிக்கையாளர்கள் வழக்கத்தை விட முன்கூட்டியே முன்பதிவு செய்யக்கூடும் என்பதை நிறுவனம் குறிப்பிட்டது. ஆனால், இப்படியான முன்பதிவுகள் தற்காலிகமாக தேவையை உயர்த்தி, விநியோக அட்டவணையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரித்தது.

எனவே, தேவையானபோது மட்டுமே முன்பதிவு செய்யவும், அத்தியாவசியமற்ற முன்பதிவுகளை தவிர்க்கவும் இந்தியன் ஆயில் வலியுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் வீடுகளுக்கு சிலிண்டர்கள் சென்றடைவதை உறுதி செய்ய பணியாளர்களும் விநியோகஸ்தர்களும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.