டெஹ்ரான்: மேற்காசிய நாடான ஈரானில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்கு சிக்கியிருந்த 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அண்டை நாடான ஆர்மீனியா வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சகத் தகவலின்படி, ஈரானில் சுமார் 9,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, தலைநகர் டெஹ்ரானில் இருந்து பல இந்தியர்கள் ஈரானின் பிற பாதுகாப்பான நகரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தாயகம் திரும்ப விரும்புவோர் ஆர்மீனியா அல்லது அஜர்பைஜான் வழியாக செல்லுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, சமீபத்தில் ஈரானுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 284 பேர் உட்பட 550க்கும் மேற்பட்டோர் ஆர்மீனியா எல்லை வழியாக ஈரானில் இருந்து வெளியேறினர். ஈரானின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் இதில் அடங்குவர்.

மேலும், 90 இந்தியர்கள் அஜர்பைஜான் நாட்டின் நிலப்பகுதி வழியாகவும் வெளியேறியுள்ளனர். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சமூக வலைதள பதிவில், இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவிய ஆர்மீனியா அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.