புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர்களுடன் தொடர்புடைய பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு நடைமுறை, அனைத்து நுகர்வோருக்கும் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மார்ச் 15 அன்று வெளியிட்ட அறிவிப்பில், தொடர்ந்து சிலிண்டர் பெற பயோமெட்ரிக் முறையில் ஆதார் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்தது.

இதற்கு விளக்கம் அளித்த அமைச்சகம், ஆன்லைன் கேவாய்சி (KYC) என்பது புதிய நடைமுறை அல்ல என்றும், இதுவரை பயோமெட்ரிக் சரிபார்ப்பை ஒருமுறையும் செய்யாதவர்கள் மட்டும் அதை மேற்கொண்டால் போதும் என்றும் தெரிவித்தது. ஏற்கனவே சரிபார்த்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானியம் பெறுபவர்கள் நிதியாண்டுக்கு ஒருமுறை இந்த சரிபார்ப்பை பின்பற்ற வேண்டும் என்றும், ஏழு சிலிண்டர்கள் பெற்ற பிறகு 8வது அல்லது 9வது சிலிண்டர் பெறும்போது இந்த சரிபார்ப்பு கட்டாயமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சரிபார்ப்பை வீட்டிலிருந்தே முழுமையாக இலவசமாக செய்யலாம்; இதனால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது. சமையல் காஸ் பயன்பாட்டில் முறைகேடுகளை கண்டறிந்து தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.