உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளா மூலம் பிரபலமான மோனாலிசா போன்ஸ்லே திருமணம், ‘லவ் ஜிஹாத்’ என அவர் குறிப்பிடும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஷ்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேசம் மகேஷ்வர் நகரைச் சேர்ந்த நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த மோனாலிசா, 2025-ல் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்கள் மூலம் கவனம் பெற்றார். ருத்திராட்சம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தபோது எடுத்த காட்சிகள் பரவியதைத் தொடர்ந்து, சனோஜ் மிஷ்ரா தயாரித்து இயக்கிய தி டைரி ஆப் மணிப்பூர் படத்தில் அவரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் நாகம்மா என்ற மலையாள படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்ற நிலையில், தனது காதலராக கூறப்படும் பர்மான் கான் என்பவரை மார்ச் 11-ம் தேதி திருமணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்ததாகவும், தற்போது படப்பிடிப்பு நடைபெறும் கேரளாவில் கணவருடன் அவர் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த திருமணம் குறித்து கருத்து தெரிவித்த சனோஜ் மிஷ்ரா, சமூக வலைதளங்களில் ஒன்றரை ஆண்டுகளாக பழகிய நபர் அவசரமாக திருமணம் செய்ததாக கூறி, இது ஹிந்து பெண்களை ஏமாற்றி மதமாற்றம் செய்யும் முயற்சியாக இருக்கலாம் என குற்றம்சாட்டினார். மேலும் சில அமைப்புகள் இதுபோன்ற செயல்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் மோனாலிசாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவை சந்தித்து, விசாரணை நடத்த வலியுறுத்த உள்ளதாக சனோஜ் மிஷ்ரா தெரிவித்தார்.




