இந்திய எல்பிஜி டாங்கர் கப்பல் ‘நந்தா தேவி’, 47,000 மெட்ரிக் டன் எல்பிஜி சரக்குடன் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்று குஜராத்தின் வதினார் துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹார்முஸ் வழியாக செல்லும் கச்சா எண்ணெய் டேங்கர்களை ஈரான் தாக்கி வருவதாகவும், இதனால் அந்த வழித்தடத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி கூறுகிறது. இதன் பின்னணியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஷி உடன் பேச்சு நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்தியாவின் ‘ஷிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ என்ற இரண்டு எல்பிஜி டேங்கர் கப்பல்களுக்கு ஈரான் அதிகாரிகள் அனுமதி வழங்கியதாக தகவல். இதில் ‘ஷிவாலிக்’ மார்ச் 16 அன்று குஜராத்தின் முந்தரா துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், தற்போது ‘நந்தா தேவி’ வதினார் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கப்பலின் தலைமை அதிகாரிகள் கூறுகையில், ஹார்முஸ் ஜலசந்தி கடப்பதற்கான நடவடிக்கையில் இந்திய மற்றும் ஈரான் கடற்படைகள் உதவி வழங்கியதாகவும், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய கப்பல் கழகம் ஒருங்கிணைப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும், கப்பல் தற்போது காண்ட்லா நோக்கி பயணித்து வருவதாகவும், அங்கு 46,000 மெட்ரிக் டன் அளவிலான எல்பிஜியை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினர். உலகளாவிய நெருக்கடி சூழலில் இந்த சரக்கு இந்தியாவிற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.




