நியூயார்க்: ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க நாடுகள் முன்வர வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் வேண்டுகோளுக்கு எந்த நாடும் சம்மதிக்கவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒட்டுமொத்தமாக அந்த அழைப்பை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் போர் காரணமாக, ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்லும் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் சுமார் 20% கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கடத்தப்படும் இந்த வர்த்தகப் பாதை தடுமாறுவதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வதாக கூறப்படுகிறது.
முதலில், தங்கள் நாட்டின் கப்பல்கள் பாதுகாப்பு வழங்கும் என டிரம்ப் அறிவித்தாலும், அதில் உள்ள ஆபத்துகளை கருத்தில் கொண்டு பின்னர் அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். தொடர்ந்து, குறிப்பாக நேட்டோ நாடுகள் மற்றும் அந்த வழியாக எண்ணெய் வாங்கும் நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் எனக் கேட்டதுடன், ஒத்துழைக்காவிட்டால் எதிர்காலம் “மிக மோசமாக இருக்கும்” என மிரட்டல் தொனியிலும் பேசினார்.
ஆனால் பல நாடுகள் வெளிப்படையாக மறுத்தன. ஸ்பெயின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கரிட்டா ரூபிள்ஸ், இப்படியான கோரிக்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றார். டிரம்புடன் நல்ல தொடர்பில் இருப்பதாக கூறப்படும் இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தலைமையிலான அரசும் இதில் ஈடுபட மறுத்தது. எஸ்தோனியா வெளியுறவு அமைச்சர் டிரம்பின் நோக்கம் மற்றும் திட்டம் என்ன என கேள்வி எழுப்பினார்; பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் இது எளிய வேலை அல்ல என்றும், விரிவான போரில் இழுக்கப்பட விருப்பமில்லை என்றும் தெரிவித்தார்.
ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போர்க்கப்பல்கள் அனுப்ப திட்டமில்லை என அறிவித்தன. அதிக எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா டிரம்பின் போருக்கு கண்டனம் தெரிவித்துள்ளதால் பங்கேற்பு வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. பின்னர் ஸ்டாமருடன் தொலைபேசியில் பேசி டிரம்ப் கோரிக்கையை வலியுறுத்தினாலும், போர்க்கப்பல்கள் அனுப்ப முடியாது என ஸ்டாமர் மீண்டும் கூறினார். கனடா பிரதமர் மார்க் கார்னி, ஈரானின் அணு ஆயுத திட்டம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டிய அவசியத்தை கனடா ஆதரிக்கிறது; ஆனால் ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் ராணுவ நடவடிக்கைகளில் இணைய மாட்டோம் என்றார். யாரும் முன்வராத நிலையில், அடுத்த கட்டமாக டிரம்ப் எடுக்கும் முடிவு—அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்புவாரா அல்லது வரி விதிப்பு போன்ற தண்டனை நடவடிக்கைகள் எடுப்பாரா—என்பது தெளிவில்லாமல் உள்ளது.




