தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் சட்டசபை தேர்தலில் திமுகவின் “பண பலம்” முடிவை நிர்ணயிக்காது; மக்களின் மனபலமே வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேஜ கூட்டணி சார்பில் இபிஎஸ் (எடப்பாடி கே. பழனிசாமி) தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறினார். தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணிக்குள் எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்ததாகவும், ஒன்று–இரண்டைத் தவிர பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறி, மக்களை திசைதிருப்பி ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார்.

மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் குடும்ப ஆட்சியை தொடரச் செய்வதற்காக தவறான திட்டங்கள் மற்றும் தவறான செய்திகளை பரப்புவதாகவும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜூனா அவதூறாக பேசியதாக கூறிய நயினார் நாகேந்திரன், இதை விஜய் ஏன் கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தேர்தலில் “மக்கள் பலமும் மக்களாட்சியும்” வெல்லும் என்றும் அவர் வலியுறுத்தினார்.