புதுடில்லி: மேற்காசியாவில் நீடிக்கும் போர் காரணமாக உலகளாவிய எரிவாயு வினியோகத் தொடரில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் வீட்டு உபயோக எல்.பி.ஜி. சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவுக்கான எல்.பி.ஜி. கப்பல்கள் பெரும்பாலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் கவலை அளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர். இருப்பினும், நாடு முழுவதும் வீட்டு சிலிண்டர் விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது எனத் தெரிவித்தனர்.

சில இடங்களில் வர்த்தக எல்.பி.ஜி. சிலிண்டர்களுக்கு மட்டும் தட்டுப்பாடு காணப்படுவதாகவும், பதுக்கலைத் தடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியது.

மேலும், கச்சா எண்ணெய் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு வீச்சில் இயங்குவதாகவும், பெட்ரோல் பங்குகள் இயல்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தது. எந்த விநியோகஸ்தரிடமிருந்தும் முழுமையான எரிபொருள் தீர்ந்துவிட்டதாக தகவல் வரவில்லை என்றும் கூறப்பட்டது.

நுகர்வோர் அச்சப்பட வேண்டாம் என்றும், முடிந்தவரை பி.என்.ஜி. (குழாய் வழி எரிவாயு) பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. முக்கிய நகரங்களில் உள்ள வர்த்தக எல்.பி.ஜி. நுகர்வோரும் பி.என்.ஜி. பயன்பாட்டுக்கு மாறி, புதிய இணைப்புகளுக்கு மின்னஞ்சல், கடிதம் அல்லது நகர்ப்புற எரிவாயு விநியோக (சி.ஜி.டி.) நுகர்வோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.