சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது என்று தெரிவித்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க “போலி நாடகம்” நடத்த முயற்சி நடக்கிறது என்றும், திமுக கூட்டணிக்கு பெண்கள் ஆதரவு அதிகம் இருப்பதை உணர்ந்து அதைத் தடுக்க சதி செய்யப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அரசின் மீது நம்பிக்கை இருப்பதால்தான் பெண்கள் துணிந்து புகார் அளிக்கின்றனர் என்றும், அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்து காவல் துறை புள்ளிவிவரங்களுடன் கூறியுள்ளதாகவும் ரகுபதி குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார்; அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளிட்ட ஆதரவு அமைப்புகள் உள்ளன என்றும், அவர் அன்புக்கு மட்டுமே அடிபணிவார்; மிரட்டலுக்கு அடிபணிய மாட்டார் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், 1996-ல் ரஜினிகாந்த் குரல் கொடுத்ததை நினைவுபடுத்தி, அவரை மிரட்ட திமுகவுக்கு அவசியமே இல்லை என்றார்.

கரூர் சம்பவம் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை சிபிஐ அழைத்துள்ளதாக கூறிய ரகுபதி, அதற்கு உரிய விளக்கத்தை அளிக்கும் தைரியம் செந்தில் பாலாஜிக்கு இருப்பதாகவும், அங்கு அவர் தகுந்த விளக்கம் தருவார் என்றும் தெரிவித்தார்.