சென்னை: தவெக கட்சியின் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா தன்னைப் பற்றி கூறிய கருத்துகள் உண்மைக்கு மாறானவை என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “காலம் பேசாது; ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, திமுக மிரட்டியதால் தான் ரஜினி அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டதாக கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகத்தினர் மற்றும் ரஜினி ரசிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் தன்னைப் பற்றி அவதூறாகவும் உண்மைக்கு மாறாகவும் பேசியதாக ரஜினி கூறினார். அந்த கருத்தை கண்டித்து தன்னுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ரகுபதி, திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் உள்ளிட்ட திரையுலக நண்பர்கள், நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட ஊடகத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.




