ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த இந்திய எல்பிஜி டேங்கர் கப்பல் ‘ஷிவாலிக்’, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்ததாக ஆமதாபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த வழியாக செல்லும் கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஈரான் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஷி இடையே நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு முன், இயற்கை எரிவாயுவுடன் வந்த ஒரு கப்பல் சில நாட்களுக்கு முன் இந்தியா வந்தடைந்ததாகவும் தகவல் வெளியாகியது. மேலும், ‘ஷிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ என்ற இரண்டு இந்திய எல்பிஜி டேங்கர் கப்பல்களும் ஜலசந்தியை கடக்க ஈரான் அதிகாரிகள் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மார்ச் 16 அன்று ‘ஷிவாலிக்’ முந்த்ரா துறைமுகம் வந்தடைந்த நிலையில், ‘நந்தா தேவி’ கப்பல் மார்ச் 17 அன்று வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.