மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான 144 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ. நேற்று வெளியிட்டது.

அதில் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி, பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின் கோட்டையாக கருதப்படும் பவானிபூரில் அவர் களமிறங்குவது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு திரிணமுல் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைந்த சுவேந்து அதிகாரி, அந்த தேர்தலில் நந்திகிராமில் மம்தா பானர்ஜியை தோற்கடித்தார்.

முதல் பட்டியலில் 10 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஸ்வபன் தாஸ்குப்தா (ராஷ்பெஹாரி), அக்னிமித்ரா பால் (ஆசன்சால் தெற்கு) ஆகிய மூத்த நிர்வாகிகளும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஆளும் திரிணமுல் காங்கிரசின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. பவானிபூர் மற்றும் நந்திகிராமில் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா பானர்ஜி மீண்டும் போட்டியிடுவாரா அல்லது வேறு தொகுதிக்கு மாறுவாரா என்பது அப்போது தெளிவாகும்.