பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணி கட்சிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மாநிலத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து இந்த போராட்டங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
பல இடங்களில் தலைவர்கள் பங்கேற்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) கலந்து கொண்டார். கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், ஈரோட்டில் தமாகா (மூப்பனார்) தலைவர் ஜி.கே. வாசன் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய இபிஎஸ், தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பள்ளி-கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை மாணவர்களை பாதிப்பதாகவும் கூறினார்.
திமுக அரசை கண்டித்து சென்னையில் இபிஎஸ் தலைமையில் நடந்த போராட்டம் தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்பாகவும் வெளியிடப்பட்டது.




