ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதிக்க முடியாது என, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மும்மொழிக் கொள்கையால் வரையறுக்கப்பட்ட அமைப்பாக நவோதயா பள்ளிகள் இருப்பதாகவும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுவதால் அனுமதி வழங்க இயலாது என்றும் அரசு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் 1986 கல்விக் கொள்கை அடிப்படையில், கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குடியிருப்பு முறை நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இப்பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை தாய் மொழி அல்லது மாநில மொழி பயிற்றுமொழியாகவும், அதன் பின்னர் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பயிற்றுமொழியாகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கட்டண விவரங்களின்படி, 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படுகிறது. 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது; மாணவியர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப மாணவர்களுக்கு கட்டண விலக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு நிலம் ஒதுக்கினால் போதும்; கட்டமைப்பு செலவுகளை மத்திய அரசு ஏற்கும் எனவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை நிறுவ மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக தமிழக அரசு சமீபத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலைப்பாட்டுக்கு கல்வியாளர்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல மொழிப் பாடங்கள் ஏற்கெனவே கற்பிக்கப்படுவதாகவும், நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் வாய்ப்புகளை குறைக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.